கனடாவில் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்ட தமிழக மாணவி கவலைக்கிடம்

தமிழகத்தை சேர்ந்த மாணவி ரேச்சல் கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கத்தியால் குத்தப்பட்டு உள்ளார். படுகாயமடைந்த அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் ரேச்சல் ஆல்பர்ட். கனடாவில் உள்ள ஒரு பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் சப்லி சின் மேனேஜ்மெண்ட் பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பல்கலைக்கழக வளாகத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத ஒருவர்ரேச்சலை கத்தியால் குத்தியுள்ளார்.

 

அதில் ரேச்சலுக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்துள்ளார். கத்தியால் குத்திய நபர் அதோடு நிற்காமல் ரேச்சலை சிறிது தூரம் இழுத்துச் சென்று வீசிவிட்டு தப்பியுள்ளார். படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட ரேச்சல் தற்போது டொரண்டோவில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

ரேச்சலின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.ரேச்சல் தாக்கப்பட்டது தொடர்பாக தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் தற்போது கனடாவில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

இதனிடையே கனடாவில் தமிழக மாணவி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரேச்சலின் குடும்பத்தினர் கனடா செல்வதற்கான விசா உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்யுமாறு வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இன்றோ அல்லது நாளையோ அவரது குடும்பத்தினர் கனடா செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ரேச்சல் தாக்கப்பட்டது தொடர்பாக விசாரித்து வரும் டொரண்டோ காவல்துறை தாக்குதல் நடத்தியவர் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் என்றும் ஒல்லியான உடல்வாகு கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளனர். கல்வி உதவித்தொகை மூலம் படித்துவந்த ரேச்சல் வரும் மே மாதம் பட்டம் பெற இருந்தார். தனது செலவுகளுக்காக கனடாவிலேயே பகுதி நேரமாக பணிபுரிந்து கொண்டே அவர் படித்து வந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply