‘தல’ தோனியை ஒரேயடியாக ‘கை’கழுவிய பிசிசிஐ..! ஒப்பந்த பட்டியலில் பெயர் நீக்கம்!!
இந்திய அணி கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து, கிரிக்கெட் ரசிகர்களால் “தல” என தலையில் வைத்து கொண்டாடப்பட்ட முன்னாள் கேப்டன் தோனியின் பெயரை இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு பல்வேறு பெருமைகள் தேடித் தந்த மூத்த வீரர் ஒருவரை, இப்படியா குப்பைத்தொட்டியில் தூக்கிப் போடுவது போல் குட்பை சொல்லி வழியனுப்புவது என கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்திய கிரிக்கெட்டில் தோனியின் பங்களிப்பு அளவிட முடியாது என்றே கூறலாம். 2004-ல் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் இந்திய கிரிக்கெட் அணியில் காலடி எடுத்து வைத்தவர் தோனி . இவரின் அதிரடி ஆட்டத்தால் விரைவிலேயே அணியில் உச்சம் தொட்டார். டெஸ்ட், ஒரு நாள், டி-20 என மூன்று விதமான போட்டிகளுக்கும் கேப்டன் பதவி வகித்த தோனி, மூன்று வித உலகக் கோப்பைகளை வென்று தந்து இந்திய அணிக்கு பெருமை சேர்த்தவர்.
தோனி களத்தில் இறங்கினாலே சிக்சர்கள் பறக்கும். கூடவே ரசிகர்களின் விசில் சத்தமும் ஏகத்துக்கும் ஒலிக்கும். ஜெயிக்க முடியாது என நினைத்த போட்டிகளைக் கூட தனியொருவனாக களத்தில் நின்று பல போட்டிகளை ஜெயித்துக் கொடுத்த பெருமையும் இவருக்கு உண்டு. இதனால் தோனிக்கு தல என பட்டம் சூட்டம் சூட்டி ரசிகர்கள் தலையில் வைத்துக் கொண்டாடிய காலம் உண்டு.
இப்படி 15 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் சாதித்த தோனிக்கு வயது 39 ஆகி விட்டது. இதனால் அவருடைய ஆட்டத்தில் சிறிது தளர்வு ஏற்படத் தொடங்கியது.கடந்தாண்டு இங்கிலாந்தில் நடந்த ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இவரின் ஆட்டம் மந்தமாக, எதிர்மறை விமர்சனங்கள் எழத் தொடங்கின.
இதனால் உலகக் கோப்பை தொடரின் கடைசிப் போட்டியில் தனதுஓய்வு முடிவை தோனி அறிவிப்பார் என்று கூட செய்திகள் வெளியாகின. இந்திய கிரிக்கெட் வாரியமும் கூட இதனைத் தான் எதிர்பார்த்தது. மூத்த வீரரை நாமாக வெளியேற்றக் கூடாது; அவராக ஓய்வை அறிவிக்கட்டும் என்றே பிசிசிஐ கருதியது.
ஆனால் உலகக் கோப்பை அரையிறுதியில் தோற்று இந்தியா வெளியேறிய நிலையில், ஓய்வு முடிவை அறிவிக்காத தோனி, 3 மாதம் லீவு மட்டும் போட்டுவிட்டு இந்திய ராணுவத்தில் தனது கவுரவப் பணியில் ஈடுபடப் போவதாக கூறி விட்டு சென்று விட்டார். ஆனால் லீவு முடிந்து திரும்பிய தோனியை, அதன் பின் நடந்த எந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் தேர்வுக் குழுவின் தேர்வு செய்யவில்லை. தோனியும் பொறுமை காத்தார்.
இனி வரும் ஏதேனும் ஒரு தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்றே எதிர்பார்த்தார். ரசிகர்களிடமும் அந்த எதிர்பார்ப்பு இருந்தது.வரும் அக்டோபரில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை வரை தோனி இந்திய அணியில் இருப்பார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக பல சரித்திர சாதனைகள் படைத்த தோனியின் கிரிக்கெட் சகாப்தத்தை ஒரேயடியாக முடிவுக்கு கொண்டு வருவது போல், இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான இந்திய அணி வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய வீரர்களின் திறமைக்கேற்ப ஏ+, ஏ, பி, சி என 4 கிரேடு களாக பிரித்து இந்தப் பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ, அதில் தோனியின் பெயரை ஒரு பட்டியலில் கூட இடம் பெறாமல் செய்து ஒரேயடியாக கை கழுவியுள்ளது.
ஏ பிளஸ் பட்டியலில் கேப்டன் கோஹ்லி, ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு சம்பளம் 7 கோடி ரூபாயாகும்.
ஏ கிரேடு பட்டியலில் அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்குமார், புஜாரா, ரகானே, கே.எல். ராகுல், தவான், சமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பன்ட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்களின் சம்பளம் ரூ. 5 கோடி ஆகும்.
பி கிரேடு பிரிவில் உமேஷ் யாதவ், சகா,ச கால், ஹர்திக் பாண்ட் யா, மயங்க் அகர்வால், ஆகியோரும், சி பிரிவில் கேதார் ஜாதவ், நவ்தீப் சைனி, தீபக்ச கார், மணிஷ் பாண்டே ஹனுமா விகாரி,ஷர் குல் தாகூர், ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பி பிரிவில் இடம் பெற்றோருக்கு ரூ.3 கோடியும், சி பிரிவினருக்கு ரூ.1 கோடியும் வழங்கப்படும்.
இந்தப் பட்டியலில் ஒன்றில் கூட தோனி பெயர் இடம் பெறாதது தோனியின ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது மட்டுமின்றி இந்திய அணிக்கு பெருமை தேடித் தந்த தோனிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி, மைதானத்தில் அவரை ஓய்வு அறிவிப்பை வெளியிடச் செய்து பெருமைப்படுத்தி இருக்கலாமே? எனவும் பலரும் கருத்து கூறியுள்ளனர்.
இந்திய அணியில் தோனிக்கு இனி இடம் இல்லை என தெரிந்தவுடன் குட்பை தோனி என்ற ஹேஸ்டேக்குடன் அவரது ரசிகர்கள் கவலையுடன் பதிவிட்டுள்ளது டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது,
📱 Share on WhatsApp 𝕏 Share on X




