தமிழக சட்டப் பேரவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின்பேச அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில், நடப்பு கூட்டத்தொடரின் 2-ம் நாளான இன்று, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் சபை கூடிய போது, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பேச முயன்றார்.
இதற்கு சபாநாயகர் அனுமதி தராததால் திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மே.வங்கம், புதுச்சேரி, பஞ்சாப் மட்டுமின்றி, பாஜக ஆளும் அசாமிலும் அம்மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் தமிழக அரசு, மத்திய பாஜக அரசுக்கு சேவகம் செய்யும் அடிமை அரசாக உள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சபையில் பேசக் கூட அனுமதி மறுக்கிறார்கள். இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.