காங்கிரஸ் பிரமுகரும் இலக்கிய பேச்சாளருமான நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசுக்கு நெல்லை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நெல்லையில், இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நெல்லை கண்ணன் பங்கேற்றார்.
அப்போது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக அவதூறாக நெல்லை கண்ணன் பேசியதாக பாஜகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, பெரம்பலூரில் தங்கியிருந்த நெல்லை கண்ணனை கைது செய்த போலீசார், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வரும் 13-ம் தேதிவரை அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தமக்கு ஜாமீன் கோரி நெல்லை மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நெல்லை கண்ணன் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதனால் நெல்லை முதன்மை நீதிமன்றத்தில் நெல்லை கண்ணன் முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, நெல்லை கண்ணனுக்கு நாமீன் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.