ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், முன்னணி நிலவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் முன்னணியில் உள்ளது. ஒன்றிய கவுன்சிலர் வார்டுகளில் அதிமுக, திமுக இடையே கடும் இழுபறி நிலவுகிறது.
தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு, கடந்த 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என மொத்தம் 91 ஆயிரத்து 375 பதவிகளுக்கு நடந்த தேர்தலில், முதல் கட்டத்தில் 76.19 சதவீதமும், 2-ம் கட்டத்தில் 77.73 சதவீதமும் வாக்குகள் பதிவானது.
ஒன்றியங்களில் வாக்குச் சீட்டு முறையில் ஒவ்வொருவரும் 4 வாக்குகள் பதிவிட்டு ஒரே பெட்டியில் போட்டதால், அவற்றை தனித்தனியாக பிரித்த பின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு சுற்றுக்கும் ஒன்றிய கவுன்சிலர் வார்டு வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 4 வண்ணங்களில் உள்ள ஓட்டுச் சீட்டுகள் பிரிக்கப்படுகின்றன.
பின்னர் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான ஓட்டுச்சீட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் முதலில் அறிவிக்கப் படுகின்றன. அதன்பின் பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தல் முடிவும், தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை முடிவும் அறிவிக்கப்படுகிறது.
மாவட்ட கவுன்சில் பதவிக்கான ஓட்டுக்கள் மட்டும், ஒவ்வொரு சுற்று முடிவிலும் தனியாக கணக்கிடப் பட்டு, இறுதிச் சுற்று முடிந்தவுடன் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முன்னணி நிலவரம் வெளிவரத் தொடங்கியுள்ளது. இதில், மாவட்ட கவுன்சிலர் வார்டுகளில், 19 இடங்களில் திமுக முன்னணியில் உள்ளது. அதிமுக 9 இடங்களில் மட்டுமே முன்னணி வகிக்கிறது.
ஒன்றிய கவுன்சில் வார்டுகளில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. திமுகவும் அதிமுகவும் தலா 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.