தமிழகத்தில் நீடிக்கும் மழை…! – வானிலை மையம் கூறுவது என்ன..?
தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்றும் 20ஆம் தேதி கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவக்காற்று தொடங்கியது முதல் தமிழகத்திற்கு எவ்வித புயலும் இன்றி இயல்பான மழை பொழிந்துவிட்டது.
இம்மாத இறுதிவரை மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்தது. சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பொழிந்தது.
நெல்லை, திருத்தணி, ராமநாதபுரம், நாகை உள்ளிட்ட இடங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும், நாளையும் தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் இருபதாம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




