குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீஸ் அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டதுடன், பேருந்துகளுக்கும் போலீசாரே தீ வைத்த புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மே, வங்கத்தில் கடந்த சில நாட்களாகவே போராட்டங்கள் தீவிரமாக நடந்து வந்த நிலையில் டெல்லியிலும் நேற்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தெற்கு டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைதியாக போராட்டம் நடத்தி, அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென பல்கலை. வளாகத்திற்குள் நுழைந்த போலீசார், மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு மாணவர்களும் கற்களை வீச அந்த வளாகமே போர்க்களமானது. போலீசார் அடித்து விரட்ட மாணவர்களும் சிதறி ஓடினர்.அப்போது பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
டெல்லியில் நேற்று மாலை நடந்த வன்முறைச் சம்பவங்களில் ஏராளமான மாணவர்கள் காயமடைந்தனர். போலீசார் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. இதற்கிடையே,இந்த வன்முறைக்கு காரணம் மாணவர்கள் தான் என்றும், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ ஒருவரே முன்னின்று இந்த வன்முறையை தூண்டி விட்டதாகவும் பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதனை மறுத்துள்ள டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, இந்த வன்முறைக்கு போலீஸ் தான் காரணம் என்றும், பாஜக தான் திட்டமிட்டு போலீசை ஏவிவிட்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாகவும் பகீர் புகார் கூறியுள்ளார். அத்துடன் போலீசாரே வாகனங்களுக்கு தீ வைக்கும் காட்சிகள், வாகனங்களை அடித்து நொறுக்குவது போன்ற புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் போலீசாரின் தாக்குதலைக் கண்டித்தும், நடவடிக்கை எடுக்கக் கூறியும் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை மேல் சட்டை அணியாமல் டெல்லி வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்.
டெல்லியில் மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை கட்டவிழ்த்து விட்டதற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.