சென்னையில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில், மே.இ.தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் ஹெட்மயர் மற்றும் ஹோப் ஜோடியின் அதிரடி முன் இந்திய பந்துவீச்சு எடுபடாமல் போய்விட்டது.
இந்தியா மற்றும் மே.இ.தீவுகளுக்கு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் போலார்டு பந்து வீச்சை தேர்வு செய்தார்.
பேட்டிங்கில் ஆரம்பத்தில் இந்திய அணி தடுமாறியது. இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் (6), ரோகித் சர்மா (36), கோஹ்லி (4) விரைவில் அவுட்டாகினர். இதன் பின் இளம் ஸ்ரேயாஸ் ஐயர் – ரிஷப் பாண்ட் ஜோடி நிதானமாக நின்று ஆடி அணியின் சரிவை மீட்டனர். இருவரும் அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரும் கணிசமாக உயர்த்தினர். ஆனால், ஸ்ரேயாஸ் (70), ரிஷப் (71) அடுத்தடுத்து வெளியேற, கேதார் ஜாதவ் அதிரடியாக 40 ரன்கள் சேர்த்து அவுட்டாக,கடைசி ஓவர்களில் மீண்டும் இந்திய அணி தடுமாறியது. இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய மே.இ.தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அம்ப்ரீஸ் 9 ரன்களில் சகாரிடம் வீழ்ந்தார். ஆனால் அதன் பின் ஹோப் – ஹெட்மயர் ஜோடி ஆட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு அதிரடி காட்டத் தொடங்கினர். நங்கூரம் பாய்ச்சியது போல் இருவரும் நின்று விளையாடிய இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறித்தான் போய் விட்டனர். ஹெட்மயர் அதிரடியாக சிக்சர், பவுண்டரிகளை விளாச, ஹோப் நிதானமாக ஆடி அவருக்கு ஒத்துழைத்தார்.
இந்த ஜோடி 218 ரன்கள் சேர்த்த நிலையில், சதம் கடந்து 139 ரன்கள் குவித்திருந்த ஹெட்மயர் அவுட்டானார். பின்னர் வந்த பூரன் (29) கை கொடுக்க, ஹோப் சதமடித்தார். இந்திய பந்துவீச்சு கடைசி வரை எடுபடாத நிலையில் 47.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த மே.இ.தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹெட்மயர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி தொடரிலும் மே.இ.தீவுகள் அணி முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை மறுநாள் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.