கோவை மாவட்டம் சூலூரில் கேந்திர வித்யாலயா பள்ளியின் முதல்வர் உட்பட 4 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் சூலூரில் இயங்கிவரும் கேந்திர வித்யாலயா பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பீகார் மாநில மாணவரை ஆசிரியர் கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் தன்னை நிர்வாணமாக்கி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியதாகவும் அந்த மாணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனடிப்படையில் மாணவரை கண்டித்ததாக பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் திவ்யா, தமிழரசி, அருணா ஆகியோர் மீது போக்சோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பீகார் மாணவர் ஆசிரியர்கள் மீது பொய் புகார் அளித்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். இதில் மாணவர்களுடன் இணைந்து பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.