--- --:--:-- --

நிர்பயாவுக்கு கொடூரம் நடந்து 7 ஆண்டுகள்..!

16

உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு வந்து இருக்கும் சூழலில் ஏழு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் டெல்லி மருத்துவ மாணவி கொடூரக் கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார் .7 ஆண்டுகள் கடந்து விட்டது எதுவும் மாறவில்லை.

 

2012 டிசம்பர் 16ஆம் தேதி இரவில் தான் அந்த சம்பவம் நடந்தது. நண்பருடன் டெல்லி முநிரீகா பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் வைத்து கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார் .

 

ஒரு சிறார் உட்பட ஆறு பேரால் மிக வன்முறையான பாலியல் கொடுமையை சந்தித்த அந்த இளம்பெண் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார் . அந்த பெண்ணின் நண்பரும் தாக்கப்பட்டார் . நாட்டின் தலைநகரில் நடந்த அந்தக் கொடூரம் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

 

நாடே அந்த பெண்ணிற்காக துடித்து போராட்டங்களில் இறங்கியது. பலத்த காயங்களால் உயிர் துடித்துக்கொண்டிருந்த மருத்துவ மாணவி சிகிச்சை பலனின்றி 13 நாட்களுக்குப்பின் உயிரிழந்தார். அடையாளத்தை மறைத்து நிர்பயா என்ற பெயரால் அழைக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயரில் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது.

 

ஆனால் மருத்துவ மாணவிக்கு அந்த கொடூரம் அரங்கேறியபேருந்து நிலையம் இன்று வரை எந்த பாதுகாப்பும் இன்றி அச்சம் தரும் விதமாகவே இருந்து கொண்டிருப்பதாக கூறுகின்றனர் டெல்லி பெண்கள்.

 

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடூரங்கள் ஒவ்வொரு விதமாக நாட்டின் மூலை முடுக்குகளில் நடந்து கொண்டு இருக்கும் வேளையில் தனது பெண்ணிற்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை செய்தவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றும் நாளை எதிர்பார்த்து இருப்பதாக கூறும் நிர்பயாவின் தாய், இது போன்ற குற்றங்களை செய்தவர்கள் கருணை மனுக்கள், மேல்முறையீடு போன்றவற்றை செய்ய அவகாசம் தராமல் உடனடியாக தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

 

இந்தியாவின் மகள்களுக்கு சமநீதி மட்டுமல்ல அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பெண்களின் விருப்பம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon