“உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவும் கூடாது; பிரசாரம் செய்யவும் கூடாது” ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு தடை!!

உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடவும் கூடாது என்றும் யாரையும் ஆதரித்து பிரச்சாரத்திலும் ஈடுபடக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

அரசியலுக்கு வரப்போவதாக பாவ்லா காட்டி வரும் ரஜினி, கடந்த 25 வருடங்களாகவே தமது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறார். கடைசியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் தான் தமது இலக்கு என்றும், அப்போதுதான் கட்சி ஆரம்பித்து களத்தில் குதிக்கப்போவதாகவும், 2 வருடங்களுக்கு முன் அறிவிப்பும் செய்து வருகிறார்.

 

இதனால் இந்த இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் தமது ரசிகர்கள் , வேறு கட்சிகளுக்கு ஆதரவாக ஈடுபட்டு விடக் கூடாது என்பதிலும் ரஜினி உஷாராகவே உள்ளார். இதனால் கடந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் தமது ஆதரவு யாருக்கும் இல்லை என்ற ரஜினி, தமது பெயரையோ, புகைப்படத்தையோ, மன்றத்தின் கொடியையோ யாரும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்றும் ரஜினி அறிவிப்பு வெளியிட்டார்.

 

தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலிலும், இதே போன்று யாருக்கும் ஆதரவில்லை என்ற அறிக்கையை, ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் மூலம் சில நாட்களுக்கு முன் வெளியிடச் செய்தார். இதனால் ஏமாந்தது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் என்றும் கூட பரபரப்பாக பேச்சு எழுந்தது. ஏனெனில், கடந்த மாதம் கமலுடன் நெருக்கமான ரஜினி, தேவைப்பட்டால் இருவரும் அரசியலில் இணைவோம் என்று கூறியிருந்தார்.

 

இதனால் உள்ளாட்சித் தேர்தலில், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, ரஜினி ஆதரவளிக்கலாம் என்றும் கூட எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினி தரப்பில் யாருக்கும் ஆதரவில்லை என்ற அறிவிப்பு வெளியான தினத்தன்றே, கமல்ஹாசனும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை என்று ஒதுங்கி விட்டார். 2021 தேர்தலில் வெல்வதே தமது லட்சியம் என்றும் கமல் விளக்கம் கொடுத்தார்.

 

இந்நிலையில், இந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள்து. இந்தத் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடக்கூடாது. அதே போல் யாரையும் ஆதரித்து பிரச்சாரத்திலும் ஈடுபடக் கூடாது என்று திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வலியுறுத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

ரஜினி மக்கள் மன்றத்தின் இந்தக் கட்டுப்பாட்டால், ஊர், ஊருக்கு நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் திருவிழாவை ரஜினி ரசிகர்கள் அமைதியாக வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


Leave a Reply