தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் நாட்டிலுள்ள சிறந்த காவல் நிலையங்களில் நான்காம் இடத்தையும், தமிழகத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள இந்த காவல் நிலையத்தை 2004 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சரான ஜெயலலிதா திறந்து வைத்தார்.
ஒரு ஆய்வாளர், மூன்று சார்பாளர்கள் உட்பட 28 காவலர்கள் இந்த காவல் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர். இங்கு பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், காவலர்கள் கனிவாக நடந்து கொள்வதாகவும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டிலேயே சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் நான்காவது இடத்திலும், தமிழக காவல் நிலையங்களில் முதல் இடத்தையும் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.