அற்புதங்களையும், அதிசயங்களையும் நிகழ்த்த இயற்கையால் மட்டுமே முடியும். பெரம்பலூர் அருகே யாரும் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் மழையில் விழுந்த நீர் இடி புதிய அருவியையே உருவாக்கி ஆச்சரியப்பட வைத்துள்ளது.
பெரிய சுற்றுலாத்தலங்கள் இல்லாத பெரம்பலூரில் புதிய ஈர்ப்பை உண்டாக்கியிருக்கிறது இயற்கை. அங்குள்ள அய்யர் பாளையம் பகுதியில் கனமழை காரணமாக விழுந்த இடி பச்சைமலையில் புதிய அருவியை உண்டாக்கியுள்ளது.
ஒரே இரவில் பச்சை மலையில் பாய்ந்தோடி விழுகிறது அருவி .மலையைப் பிளந்து கற்களை புரட்டிப்போட்டு கற்பனைக்கு எட்டாத வகையில் உருவாகியுள்ள புதிய அருவி பெரம்பலூர் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
புதிய அருவியைப்பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா தொடர்ந்து இந்த நீர்வரத்து இருந்தால் மக்கள் வந்து செல்லும் வகையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என தெரிவித்தார். அய்யர் பாளையத்தில் நீர் இடியால் ஏற்பட்டுள்ள இயற்கை அதிசயத்தை மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.