ஆன்லைன் வர்த்தகத்தில் 5 லட்சம் மதிப்பிலான செல்போன்களை திருடிய டெலிவரி ஊழியர்கள் கைது
சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கம் பகுதியில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை திருடிய டெலிவரி ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த வினோத்குமார் மற்றும் அய்யபாக்கம் பகுதியை சேர்ந்த ஜான்சன் ஆகியோர் சென்னை பட்டரைவாக்கத்தில் உள்ள தனியார் ஆன்லைன் வர்த்தக மையத்தில் டெலிவரி ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களிடம் டெலிவரி செய்வதற்காக வழங்கப்பட்ட உயர் ரக செல்போன்கள் சிலவற்றை வாடிக்கையாளர்களிடம் வழங்காமல் மூன்றாம் நபர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். இதை கண்டுபிடித்த அந்த நிறுவனம் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
இதனையடுத்து ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 34 செல்போன்களை திருடி விற்பனை செய்ததை கண்டுபிடித்தார்கள். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




