டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் மர்ம மரணம்!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அனைவரது சந்தேகமும் அவரது கணவரின் மீது விழுந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சோனம், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.

 

அளவுக்கதிகமான மயக்க மருந்துகள் ஊசி மூலம் உடலில் செலுத்தப்பட்ட நிலையில் மருத்துவர் சோனம் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த சிகர் என்ற மருத்துவருக்கும், சோனத்திற்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் இருவரும் கடந்த வருடம் மே மாதம் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

 

ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே அதிக வரதட்சணை கேட்ட அவர் சோனம் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். போதை பழக்கத்திற்கு அடிமையான சிகர் சோனத்திற்கும் போதை பொருட்களை கொடுத்து அவரையும் போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி உள்ளார்.

 

இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற மருத்துவர் சோனம் அதன்பிறகு கணவரை பிரிந்து ஹரியானாவில் தனியே தங்கியிருந்தார். அங்கே ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

 

ஆனால் அப்போதும் சோனத்திற்கு கணவர் சிகர் தொடர்ச்சியாக தொல்லைகள் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் மருத்துவர் சோனம் தான் தங்கியிருந்த வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சடலத்திற்கு அருகில் சில மாத்திரைகளும் ஊசிகளும் சிதறிக்கிடந்தன.

 

நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகப்படியான மயக்க மருந்து எடுத்துக் கொண்டதால் சோனம் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்தது.

 

ஆனால் தனது மகள் சோனம் இறப்பிற்கு அவரது கணவர் தான் காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் படி மருத்துவர் சிகர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கணவர் கொடுமைப்படுத்தி வந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply