உள்ளாட்சி தேர்தலை நடத்த முட்டுக்கட்டை போட பலர் முயற்சிக்கின்றனர். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் கட்டாயம் நடந்தே தீரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 33-வது புதிய மாவட்டமாக நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசி மாவட்டம் இன்று உதயமானது. இதற்காக இன்று நடைபெற்ற விழாவில் தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசுகையில், தென்காசி பகுதி மக்களின் 33 ஆண்டு கால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். மக்களின் வசதிக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் மட்டுமே புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதற்கும் , உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று விடக் கூடாது என பல பேர் முட்டுக்கட்டை போட நினைக்கின்றனர். ஆனால் அவர்களின் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது. தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். யார் தடுத்தாலும் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும். உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகத் தேர்தல் கொண்டு வருவதை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறார். 2006-ல் அவர் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது தான், முதன் முதலில் மறைமுகத் தேர்தலையே கொண்டு வந்தார். மும்பை, பெங்களூரு போன்ற பெரிய் மாநகராட்சிகளில் கூட மறைமுகத் தேர்தல் மூலம் தான் மேயர் தேர்தல் நடக்கிறது. மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது போல, மு.க.ஸ்டாலின் இப்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறக் கூடாது என்பது தான் மு.க.ஸ்டாலினின் எண்ணமாக உள்ளது. அது நிறைவேறாது. உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.






