மாற்றுத்திறனாளி மகளை பள்ளிக்கு சுமந்து செல்லும் தாய்…! நெகிழ வைக்கும் அன்பு

மாற்றுத்திறனாளியான தனது மகளை 10 மாதம் கருவில் சுமந்த தாய் அந்த மகளின் கல்விக்காக 15 ஆண்டுகளாக பள்ளி வகுப்பறைக்குள் சுமந்து செல்கிறார்.

 

பள்ளிக்கூடத்தில் கேட்டை பிடித்தபடி காத்திருக்கிறார் பத்மாவதி. கண்கள் பூத்திருக்க, கால்கடுக்க இவர் பள்ளியின் முன்பாகவே காத்துக் கிடக்கிறார். காரணம் இவரது ஒரே மகள் திவ்யா. உத்திரமேரூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் திவ்யா நடக்க இயலா குறைபாட்டுடன் பிறந்தவர்.

 

தொடக்க கல்வியை சொந்த ஊரான பெருங்கோலியில் படித்த நிலையில் மேல்நிலை கல்விக்காக திவ்யா உத்திரமேரூர் வரை வரஇருந்தது. மகளின் படிப்பை தொடர விரும்பியதால் பத்மாவதி அவரை இடுப்பில் சுமந்தபடி பள்ளிக்கு தினமும் அழைத்து செல்கிறார்.

 

இரண்டு கிலோமீட்டர் தூரம் மகளை இடுப்பில் சுமந்து வந்து அரசு பேருந்தில் ஏறி உத்திரமேரூர் அழைத்து வரும் பத்மாவதி அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் சுமந்தபடி பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார். மகளின் கல்வியை கருத்தில் கொண்டு 15 ஆண்டுகால பயணத்தை தொடர்கிறார் இத்தாய்.

 

தாயின் அளப்பரிய பாசத்தால் படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கும் மகள் திவ்யா தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதை தன்னுடைய லட்சியம் என்கிறார்.குறைபாட்டுடன் மகள் பிறந்ததால் கணவர் விட்டு சென்றாலும், மனம் தளராமல் மகளுக்கு கல்வி தந்து அவர் வாழ்வு சிறக்க உறுதியுடன் செயல்பட்டு வருகிறார்.

 

பத்மாவதி மகளை பள்ளிக்கு அழைத்து வந்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்ல வேறு உதவி இல்லாததால் வாழ்வாதாரத்தை ஈட்டும் பொருட்டு வேலைக்குச் செல்லவும் இயலவில்லை என கலங்குகிறார் இத்தாய். தளர்வு இல்லாமல் தங்கள் நலன் பேணும் இத்தாயின் இடர் விரைவில் களையப்படவேண்டும்.


Leave a Reply