தலைமறைவான நித்யானந்தா…? ஆசிரம நிர்வாகிகள் கைது

நித்யானந்தா ஆசிரமத்தில் குழந்தைகளை கடத்தி வைத்திருப்பதாக கூறி அவரது ஆசிரம நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நித்யானந்தா தலைமறைவானதாக கூறப்படும் நிலையில் தன் மீதான குழந்தை கடத்தல் குற்றச்சாட்டிற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

ரஞ்சிதாவுடனான வீடியோ, மதுரை ஆதினம் வாரிசு, சூரியனை தாமதமாக உதிக்க வைத்தேன் எனக் கூறியது, விலங்குகளை பேசவைக்க போகிறேன் என்றது, சேலம் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தை முற்பிறவியில் தான் காட்டியதாக பேசியது என நித்தியானந்தா மீதான சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை.

 

அந்த வரிசையில் தான் தற்போது குழந்தைகளை நித்தியானந்தா கடத்தியதாக குஜராத்திலிருந்து புகார் எழுந்தது. பெங்களூருவில் உள்ள நித்தியானந்தாவிற்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் படித்து வந்த தனது நான்கு மகள்களை தனது அனுமதியில்லாமல் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு அழைத்து சென்றதாக பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா குற்றம்சாட்டியிருந்தார்.

 

மேலும் ஆசிரமத்திற்கு சென்றபோது அங்கு மகள்களை காண அனுமதிக்கவில்லை எனவும் ஜனார்த்தன சர்மா புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக குஜராத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், அகமதாபாத்தில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் அதிரடியாக நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்த 4 குழந்தைகளை மீட்டு உள்ளனர்.

 

மேலும் ஆசிரம நிர்வாகிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குழந்தைகளை கடத்தி அவர்கள் மூலம் ஆசிரமத்திற்கு நிதி திரட்டியதாக நித்தியானந்தாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சர்ச்சைகளுக்கு இடையே வழக்கம்போல் ஆன்லைனில் பக்தர்களுக்கு சொற்பொழிவாற்றிய நித்தியானந்தா குழந்தைகளை கடத்தி வைத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

கடந்த பல மாதங்களாக ஆன்லைனில் மட்டுமே பக்தர்களுக்கு சொற்பொழிவாற்றி வரும் நித்யானந்தா வெளிநாட்டில் பதுங்கியிருந்து ஆன்லைனில் மட்டும் சொற்பொழிவாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Leave a Reply