பெண் பக்தைக்கு கன்னத்தில் ‘அறை’..!சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதருக்கு “வலை”!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி கும்பிடச் சென்ற பெண் பக்தைக்கு கன்னத்தில் அறை விட்ட தீட்சிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

 

சிதம்பரம் வஉசி தெருவைச் சேர்ந்த செல்வகணபதி என்பவரின் மனைவி லதா. இவர் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.நேற்று தனது மகனின் 21-வது பிறந்த நாளை முன்னிட்டு, புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்ய சென்றார்.

 

அங்குள்ள முக்குறுணி விநாயகர் கோயில் சன்னதியில், தேங்காய், பழம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களைக் கொடுத்து அர்ச்சனை செய்யுமாறு தீட்சிதரிடம் கொடுத்துள்ளார். அர்ச்சனைத் தட்டை வாங்கிய தீட்சிதர் தர்ஷன் என்பவர், அடுத்த நொடியே சாமி முன்காட்டி விட்டு திரும்பக் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த லதா,தனது மகன் பெயர், ராசி, நட்சத்திரத்தை கேட்காமலே எப்படி அர்ச்சனை செய்தீர்கள் என்று தீட்சிதரிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்துள்ளார்.

இதற்கு தகாத வார்த்தைகளால் பதிலளித்த தீட்சிதர், திடீரென லதாவின் கன்னத்திலும் ஓங்கி அறை விட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியில் நிலை தடுமாறிய லதா, கீழே விழ கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதன் பின்னர் தம்மை அறைந்த தீட்சிதர் தர்ஷன் மீது போலீசில் புகார் கொடுத்த லதா, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சாமி கும்பிட பெண்ணை, கோயில் தீட்சிதரே தகாத வார்த்தைகளால் திட்டி, கன்னத்தில் அறைந்த சம்பவம் சிதம்பரம் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது.

 

இதற்கிடையே லதாவை கன்னத்தில் அறைந்த தீட்சிதர் தர்ஷன் மீது பெண் வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகி விட்ட தீட்சிதர் தர்ஷனையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Leave a Reply