கடைகளுக்கு சென்று நமக்கு தேவையான பொருட்களை அலைந்து திரிந்து வாங்குவதற்கு பதிலாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது எளிதான ஒன்றாக மக்களால் பார்க்கப்படுகிறது. எனினும் அதீத ஆன்லைன் ஷாப்பிங் தற்போது ஒரு தவிர்க்க முடியாத மன நோயாக மாறிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக ஆன்லைன் ஷாப்பிங் செய்வது தற்போது மிகப்பெரிய மனநோயாக மாறிக்கொண்டு இருக்கிறது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வளர்ந்துவரும் நாடுகளில் சுமார் 5 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பையிங் ஷாப்பிங் டிஸ்ஆர்டர் என்ற இந்த புதிய வகை மனநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக லண்டனை சேர்ந்த ஒரு பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி ஜெர்மனியில் உள்ள ஹனோவர் மெடிக்கல் ஸ்கூலில் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த பையன் ஷாப்பிங் டிஸ்ஆர்டர் என்கிற பிரச்சனையை மனநோய்க்குள் கொண்டுவந்து வரையறுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
தொடர்ச்சியாக ஆன்லைனில் பொருட்களை வாங்கி கொண்டிருப்பது, மற்ற வேலைகளில் கவனம் செலுத்தாமல் அளவுக்கு மீறி ஆன்லைனில் தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிப்பது, கடன் வாங்கி ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது என எந்த நேரமும் இன்டர்நெட்டில் பொருட்கள் வாங்குவதை நினைத்து ஏங்கிக் கொண்டே இருப்பது இந்த மன நோயின் தீவிர வடிவங்களாக பார்க்கப்படுகிறது.
மகிழ்ச்சியான, முழு திருப்தியான மனநிலையில் நாம் இருக்கும்போது நாம் மூளையில் டோபோமைன் என்கிற வேதிப்பொருள் சுரக்கும். இந்த வேதிப்பொருள் கொடுக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே மீண்டும் மீண்டும் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் நிலைக்கு அடிமையாகிறார்கள் வாடிக்கையாளர்கள்.
குடும்பத்தில் கவனம் செலுத்தாமல் எந்தநேரமும் சண்டையிடுவது, வருவாய்க்கு மீறிய செலவினால் துன்பத்திற்கு ஆளாவது,கடன் சுமைக்கு தள்ளப்படுவது, இதனால் பண மோசடியில் ஈடுபடுவது, வாங்கிய பொருட்களை குடும்பத்தாரிடமிருந்து மறைத்து வைப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு இந்த ஷாப்பிங் மனநோய் வித்திடுகிறது.
இன்டர்நெட்டில் உள்ள பலவிதமான ஏலம் விடும் தளங்கள் மக்களை சூதாட்ட பாணியில் ஷாப்பிங் செய்யத் தூண்டுவதும் குறிப்பிடத்தக்கது. ஆடம்பரத்திற்காக கட்டாயமாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதை அனுபவித்தாலும், இது சுயமரியாதையை உயர்த்துவதாக நினைப்பதாலும், தங்களுக்கு தேவையில்லாத, விருப்பமற்ற, பயன்படுத்த முடியாத பொருட்களை வாங்குவதற்கு இந்த மனநோய் பாதித்தவர்கள் ஆளாக்கப்படுகிறார்கள் .
அதனால்தான் ஆடம்பர காரணிகள், உடல் பராமரிப்பு பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை இவர்கள் வாங்கும் பட்டியலில் அடிக்கடி இடம்பெறுகின்றன. சூதாட்டம், வீடியோ கேம்ஸ்களுக்கு அடிமையாவது, திருட்டு தொழிலில் அதிக கவனம் காட்டுவது உள்ளிட்ட பிரச்சினைகளை உலக சுகாதார மையம் மனநோயாக அங்கீகரித்தது போல் ஆன்லைன் ஷாப்பிங் பிரச்சனையை இதுவரை மனநோயாக அங்கீகரிக்கவில்லை.
ஆனால் இதற்கான தேவை மிக அதிகமாக இருக்கிறது என்றும், அப்படி அங்கீகரித்தால் மட்டுமே இதற்கான சிகிச்சை முறைகளால் நோயாளிகள் பலன் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்று மனநல மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.