இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்வாவது உறுதியாகியுள்ளது. தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவை விட 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளதால், ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனா கட்சியினர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையின் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனா கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே, ஆளும் புதிய ஜனநாயக முன்னணி சார்பில், முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசா உள்பட 35 பேர் போட்டியிட்டனர். நேற்று பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் வாக்குப் பதிவு நடைபெற்றது.மொத்தம் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. குறிப்பாக தமிழர்கள் மற்றும் சிறு பரன்மை இஸ்லாமியர்கள் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், வழக்கத்துக்கு மாறாக வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பல்வேறு அமைப்புகள் தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்திருந்தும், அதை புறந்தள்ளி விட்டு இந்தப் பகுதி மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.
நேற்று மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன், வாக்குகள் எண்ணும் பணியும் உடனே தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் கோத்தபய ராஜபக்சேவுக்கு அமோக வாக்குகள் கிடைத்து முன்னிலை பெறத் தொடங்கினார். தபால் வாக்குகளில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மட் டுமே சஜித் பிரேமதாசா கூடுதல் வாக்குகளை பெற்றார்.
தொடர்ந்து, பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதிலும் தொடக்கத்தில் முதல் இரண்டு சுற்றுகளில் கோத்தபய ராஜபக்சேவே முன்னிலை பெற்றார். ஆனால் திடீர் திருப்பமாக இன்று அதிகாலை முதலே சஜித் பிரேமதாசா முன்னிலை பெறத் தொடங்கினார். ஆனால் அடுத்தடுத்த சுற்றுகளில் கோத்தபய மீண்டும் தொடர்ந்து முன்னிலை
இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை பெறத் தொடங்கினார். அதன் பின் கோத்தபயக்கும் சஜித்துக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்து, கோத்தபய 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இதனால் கோத்தபய வை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவும் தமது தோல்வியை ஒப்புக் கொண்டு, கட்சியின் துணைத் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை லேட்டஸ்ட் நிலவரம் :
கோத்தபய ராஜபக்சே : 48,85,035
சஜித் பிரேமதாசா : 40,87,947
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளில் கிட்டத்தட்ட மூன்றில் 2 பங்கு வாக்குகள் எண்ணப்பட்டுவிட்டதால், 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது. இதில் இலங்கையில் பெரும்பான்மையாக உள்ள சிங்கள வாக்காளர்கள் மத்தியில் கோத்தபய ராஜபக்சேவுக்கு மிகப் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. அதே வேளையில் தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் சஜித் பிரேமதாசாவுக்கும் ஆதரவாக விழுந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கோத்தபயக்கு மிகச் சொற்ப வாக்குகளே கிடைத்தாலும், சிங்களர்களின் அமோக ஆதரவால் கோத்தபய வெற்றி உறுதியாகிவிட்டது என்றே கூறலாம்.