அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன? மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் எண்ணி பார்க்க முடியாத இந்த குளிரில் தான் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் மக்கள் வசித்து வருகின்றனர்.
பருவநிலை மாற்றத்தால் அமெரிக்காவில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை மாறியிருக்கிறது. வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றத்தாலும், ஆர்டிக் வெடிப்பு காரணமாகவும் தான் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் சைபீரியாவில் ஆர்டிக் வெடிப்பால் அதிதீவிரமாக பணி மழை பெய்த நிலையில் தற்போது அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் அதிக அளவில் பனிமழை பொழிய தொடங்கியிருக்கிறது.
குறிப்பாக கண்சாசில் மைனஸ் 18 டிகிரி செல்சியசும், சிகாகோவில் மைனஸ் 13 டிகிரி செல்சியஸ், அமெரிக்கா மெக்சிகோ இடையேயான டெக்ஸாஸில் இதுவரை இல்லாத அளவிற்கு பனிபொழிவு காணப்படுகிறது. இதனால் பல நகர்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய சாலைகளில் பனிக்கட்டிகள் படர்ந்து இருப்பதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி இதுவரை 8 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் ஜனவரியில் இருக்கும் காலநிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறும் வானிலை ஆய்வு மையம் அடுத்தடுத்த நாட்களிலும் வெப்பநிலை குறையும் என்றும் எச்சரித்துள்ளது.