வங்கதேசத்திற்கு எதிரான 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது.
வங்கதேச கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையே, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடந்த முதல் போட்டியில், வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், இந்தியாவை வென்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றிருந்தது.
இரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, வங்கதேசம், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் சஹால் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து, 154 ரன்கள் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
வங்கதேச பந்துவீச்சை துவம்சம் செய்து, இந்திய வீரர்கள் எளிதாக ரன் சேர்த்தனர். குறிப்பாக, ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 43 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா, 15 .4 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1- 1 என்ற கணக்கில் இந்திய அணி, தொடரை சமன் செய்துள்ளது.