முதல்வர் பதவி விலகினார் ஃபட்னாவிஸ் – மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்?

மகாராஷ்டிரா சட்டசபையின் ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் நிலையில் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை, முதல்வர் ஃபட்னாவிஸ் அளித்தார். புதிய ஆட்சிக்கு யாரும் உரிமைகோராத நிலையில், குடியரசுத்தலைவர் ஆட்சி அமலாகும் என்று தெரிகிறது.

 

மகாராஷ்டிரத்தில் 288 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் பாஜக 105 தொகுதிகளிலும் சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.

 

பெரும்பான்மைக்கும் அதிகமாக 161 இடங்களில் இந்த கூட்டணி வெற்றிபெற்றாலும், ஆட்சியமைக்க முடியாத நிலை நீடித்து வருகிறது. ஆட்சியில் 50:50 பங்கீடு தேவை என்பதில் சிவசேனா பிடிவாதமாக உள்ளதால் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. இதற்கு மத்தியில் மகாராஷ்டிரா சட்டசபையின் ஆயுட்காலமும் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

 

இந்நிலையில் மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்து, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை, இன்று மாலிய தேவேந்திர ஃபட்னாவிஸ் வழங்கினார். தமது அமைச்சரவை சகாக்களுடன் மும்பை ராஜ்பவனுக்கு சென்று, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிவிடம் கடிதத்தை அளித்தார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஃபட்னாவிஸ், 5 ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்ததில் மகிழ்ச்சி என்றார். மகாராஷ்டிராவில், புதிய ஆட்சி அமைக்க எந்த கட்சியும் உரிமை கோராத நிலையில், அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply