பேனர், போஸ்டர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி!
தமிழக அரசியல் களம் மற்றும் பொதுவெளிகளில் விளம்பர பேனர்கள் மற்றும் சுவரொட்டிகள் வைப்பது தொடர்பான சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து பெரும் பேசுபொருளாக மாறுவது வழக்கம். சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களிலும், குறிப்பாகப் பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க) தலைமை அலுவலகத்தைச் சுற்றிலும் தொடர்ச்சியாக அதிக அளவில் பேனர்களும், சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு வருவதாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
முன்னதாக, கடந்த 2025-ம் ஆண்டில் சென்னை கே.கே. சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள பொது இடத்தில் சென்னை மாநகராட்சியின் உரிய அனுமதியின்றி விளம்பரப் பலகைகளை வைத்ததாக நீலாங்கரை காவல்துறையினர் சோழிங்கநல்லூர் தொகுதி த.வெ.க நிர்வாகி ஈ.சி.ஆர் சரவணன் மற்றும் கட்சி நிர்வாகி ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சட்டவிரோதமாகப் பேனர்கள் அமைத்தது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணையும் நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் த.வெ.க சார்பில் வைக்கப்படும் கட்டுப்பாடற்ற பேனர் மற்றும் சுவரொட்டி கலாச்சாரம் குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தி நிலவி வந்தது. இந்த விவகாரம் தொடர்பாகத் தலைமைப் பொறுப்பில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தின் கவனத்திற்குப் புகார்கள் சென்றதை அடுத்து, கட்சி நிர்வாகிகளுக்கும் தொகுதி பிரதிநிதிகளுக்கும் உரிய வழிகாட்டுதல்களும் எச்சரிக்கைகளும் வழக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் சுவரொட்டிகள் மற்றும் பேனர்களைக் தவிர்க்குமாறு ஈ.சி.ஆர் சரவணன் எம்.எல்.ஏ தமது சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாகக் கட்சியினருக்குத் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டார். பிறருக்கு அறிவுறுத்துவதோடு நின்றுவிடாமல், அந்த மாற்றத்தைத் தங்களது சொந்தக் கட்சியின் தலைமையகத்திலிருந்தே துவங்க வேண்டும் என்பதில் அவர் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார்.
அதன் ஒரு பகுதியாக, பனையூரில் அமைந்துள்ள த.வெ.க-வின் தலைமை அலுவலக வாயில் கதவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த அனைத்து விதமான போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் விளம்பர அச்சிடல்கள் முழுமையாக அகற்றப்பட்டு அப்பகுதி தூய்மைப்படுத்தப்பட்டது. கதவுகளுக்குக் கட்சியின் வண்ணங்கள் புதிதாகப் பூசப்பட்டு, முகப்பில் அழகிய தோற்றம் அளிக்கப்பட்டதுடன், இனிவரும் காலங்களில் யாரும் அங்கு நோட்டீஸ்களையோ போஸ்டர்களையோ ஒட்டக்கூடாது என்பதை வலியுறுத்தும் எச்சரிக்கை வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்களைத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த ஈ.சி.ஆர். சரவணன் எம்.எல்.ஏ, “மாற்றம் என்பது நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும்” என்ற கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். கட்சித் தலைமையகத்தின் நுழைவாயில் சுத்தம் செய்யப்பட்டு, கட்சி கொடியின் வண்ணத்தில் சாயம் பூசப்பட்டிருப்பதாகவும், ‘நோட்டீஸ் ஒட்டாதீர்கள்’ என்ற தெளிவான செய்தி காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சியினர் இடையே நிலவும் போஸ்டர் மற்றும் பேனர் கலாச்சாரத்திற்கு எதிரான இந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்குப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும், கட்சித் தொண்டர்கள் இடையேயும் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. த.வெ.க.வின் இந்த முன்மாதிரி நடவடிக்கை மற்ற சட்டமன்றத் தொகுதிகளிலும் தீவிரமாகப் பின்பற்றப்பட்டால், பொது இடங்கள் சுவரொட்டிகளால் பாழாவது தவிர்க்கப்படும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





