பேருந்துகளின் கூடுதல் கட்டண விவகாரம்: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தி கடந்தாண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

 

ஆனால் அந்த கட்டணத்தை விட கூடுதலாக தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி கதிர்மதியோன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு குறைந்த அளவில் அபராதம் வசூலிக்கப்படுவதால் எந்த பயனும் இல்லை எனவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

 

இதையடுத்து இந்த மனு தொடர்பாக டிசம்பர் 6ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழ்நாடு போக்குவரத்து துறை செயலர், போக்குவரத்து ஆணையர் உள்ளிட்டோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Leave a Reply