திருப்பூரில் காதலர் திடீரென காதலிக்க மறுத்துவிட்டதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள குங்குமம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிருந்தா. இவர் பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த 24 வயதான சந்தோஷ் தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.பிருந்தா மற்றும் சந்தோஷ் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிருந்தா, சந்தோஷ் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கண்ட பிருந்தாவின் தாய் அது குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு தாங்கள் இருவரும் காதலிப்பதாக பிருந்தா கூறியுள்ளார். சந்தோஷிடமே நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறும் கூறியுள்ளார். பின்னர் சந்தோஷை தாயுடன் சென்று நேரில் சந்தித்த பிருந்தா தன்னை காதலிப்பது குறித்து தாயிடம் கூறுமாறு கேட்டுள்ளார். அப்போது பிருந்தாவை காதலிக்கவில்லை என்று சந்தோஷ் கூறியுள்ளார்.
தனது தாய் முன்னிலையில் காதலன் தன்னை காதலிக்கவில்லை என கூறியதால் மனமுடைந்து வீடு திரும்பியுள்ளார். பின்னர் சந்தோஷை செல்போனில் தொடர்பு கொள்ள பிருந்தா முயற்சித்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்காததால் மனமுடைந்த பிருந்தா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காதலன் ஏமாற்றி விட்டதால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக பிருந்தா வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிருந்தா சிகிச்சை பலனளிக்காமல் அதிகாலை உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பிருந்தாவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.