--- --:--:-- --

திருச்சி கிழக்குத் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல்..!

1

நடந்து முடிந்த 2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தவெக தலைவர் ஜோசப் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார். சட்ட விதிகளின்படி ஒருவர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால், 14 நாட்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு மற்றொரு இடத்தை ராஜிநாமா செய்ய வேண்டும்.

 

அதன் அடிப்படையில் சென்னை பெரம்பூர் தொகுதியைத் தன் வசம் வைத்துக்கொண்டு, கடந்த மே 10, 2026 அன்று திருச்சி கிழக்குத் தொகுதி பதவியை அவர் அதிகாரப்பூர்வமாக ராஜிநாமா செய்தார். இதனால் இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, தற்போது இடைத்தேர்தலுக்கான வாக்குச்சாவடி ஆய்வுகள் மற்றும் தேர்தல் தயாரிப்பு முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதன் ஒரு பகுதியாக, திருச்சி ஆட்சியர் பிரத்திக் தயாள் கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாநகர வடக்கு காவல் துணை ஆணையர் அரவிந்த் பனாவத் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

 

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்குத் தேவையான குடிநீர், தடையற்ற மின்சாரம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி மற்றும் போதிய வெளிச்சம் ஆகியவை முறையாக உள்ளனவா என்று அவர்கள் ஆய்வு செய்தனர். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடுவது மற்றும் சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்துவது போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துக் கலந்தாலோசித்தனர்.

 

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, எவ்வித சுணக்கமும் இன்றி பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ஆளும் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

 

 

தவெக அரசுக்கு மக்களிடம் உள்ள ஆதரவு மனநிலையைப் புரிந்துகொண்டுள்ள தவெக, அடுத்து வரும் இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது. திருச்சி கிழக்குத்தொகுதியில் விரைவில் நடத்தப்படவுள்ள இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக மற்றும் இடதுசாரி வேட்பாளர்களிடையே கடும் போட்டி ஏற்படும் எனத் தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon