உள்ளாட்சித் தேர்தலில் 95% இடங்களில் அதிமுக வெற்றிபெறும்: முதலமைச்சர் பழனிசாமி

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 95 விழுக்காடு இடங்களில் வெற்றி பெறும் என்றும் இதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் சென்னையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி இடைத் தேர்தல்களில் பணியாற்றியதை போன்றே உள்ளாட்சித் தேர்தலிலும் திட்டமிட்டு பணியாற்றி வெற்றிபெறச் செய்யவேண்டுமென நிர்வாகிகளை அறிவுறுத்தினார். அப்படி உழைத்தால் 95 விழுக்காடு இடங்களில் அதிமுக வெல்லும் என முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

இதேபோல உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்யுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார். மேலும் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து பணியாற்றுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Leave a Reply