பீட்ஸா ஆர்டர் செய்வது போலல்ல அறிவியல் ஆராய்ச்சி: பிரதமர் மோடி

விஞ்ஞானிகளின் அறிவியல் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் மக்களுக்கு நீண்ட கால பலனை தருவதாக இருக்க வேண்டும் என்று, கொல்கத்தா சர்வதேச அறிவியல் விழாவில் பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தினார்.

 

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் விஞ்ஞான பாரதி அமைப்பு ஆகியன இணைந்து, இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நான்கு நாள் அறிவியல் கண்காட்சியை நடத்தி வருகின்றன. விழாவின் முதல் நாளான நேற்று, பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

 

அறிவியலில் தோல்வி என்பது இல்லை. இதில் முயற்சிகள், பரிசோதனைகள் மற்றும் வெற்றிகள் அடக்கம். நூடுல்ஸ் தயாரிப்பது போலவோ, பீட்சா வாங்குவது போலவோ அறிவியல் ஆராய்ச்சிகள் கிடையாது. இதற்கு பொறுமை மிகவும் அவசியம்.

 

அறிவியல் ஆராய்ச்சிகளின் பலன் மக்களுக்கு ஒரு நீண்டகால தீர்வை அளிப்பதாக இருக்க வேண்டும். விஞ்ஞானிகள் சர்வதேச விதிகளையும், தரத்தையும் கருத்தில் கொண்டு நீண்டகால பலன்களை அளிக்கும், தீர்வு அளிக்கும் வகையிலான ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்

 

சந்திரனை ஆராய்வதற்காக, இஸ்ரோ சார்பில் சந்திரயான்-2 வடிவமைக்கப்பட்டது. இத்திட்டத்துக்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்தனர். இதில் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறவில்லை என்றாலும், திட்டம் வெற்றி பெற்றது. இந்தியாவின் அறிவியல் சாதனைகளின் பட்டியலில், இது பெரிய உயரத்தை தொட்டிருக்கிறது என்று மோடி குறிப்பிட்டார்.

 

இவ்விழாவில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் ஆசுதோஷ் சர்மா, இங்கிலாந்து தலைமை அறிவியல் ஆலோசகர் லவ்ஹித் பூட்டான், மாலத்தீவு, மியான்மர் நாட்டு கல்வி அமைச்சர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


Leave a Reply