--- --:--:-- --

நவம்பர் 1 முதல் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கக் கூடாது!

3

நவம்பர் முதல் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கக் கூடாது கடைகளுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழ்நாட்டில் டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகளில் நவம்பர் 1ஆம் தேதி முதல் மதுபாட்டிலுக்கு அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் கூடுதலாக ரூ.10 வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 

அதேநேரத்தில், காலி மதுபாட்டிலைத் திருப்பி வழங்கும் நுகர்வோருக்கு ரூ.10 திரும்ப வழங்கும் நடைமுறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம், அனைத்து மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

 

அதில், தற்போது டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலின் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல், காலி பாட்டிலைத் திரும்பப் பெறும் திட்டத்துக்காக நுகர்வோரிடம் ரூ.10 தனியாக வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டிலைத் திருப்பிக் கொடுக்கும்போது அந்தத் தொகை நுகர்வோருக்கு மீண்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி முதல் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரியாக ஒரு மதுபான பாட்டிலுக்கு ரூ.10 விதிக்கப்படுகிறது. இந்தத் தொகை மதுபாட்டிலின் அதிகபட்ச சில்லறை விலையிலேயே சேர்க்கப்படுவதால், நுகர்வோரிடம் தனியாக ரூ.10 வசூலிக்கும் நடைமுறை நிறுத்தப்படுகிறது.

 

 

இதன்படி, மதுபாட்டிலில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலைக்கு மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும். எந்தக் காரணத்தைக் கூறியும் கூடுதல் தொகை வசூலிக்கக் கூடாது. இதை மீறி வசூல் செய்தால், சம்பந்தப்பட்ட கடைப் பணியாளர்கள் மற்றும் அதைக் கட்டுப்படுத்தத் தவறும் மேற்பார்வை அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்கான இயந்திரங்கள் (Reverse Vending Machines) அனைத்து கடைகளிலும் நிறுவப்படும் வரை, தற்போதைய நடைமுறையின்படி காலி பாட்டில்களைப் பெற்று, நுகர்வோருக்கு ரூ.10 திரும்ப வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

இந்தத் தொகை, மதுபாட்டிலின் அதிகபட்ச சில்லறை விலையில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ள வரித் தொகையிலிருந்து வழங்கப்படும். காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் இயந்திரங்களை நிறுவுவதற்கான ஒப்பந்த நடைமுறை நடைபெற்று வருவதாகவும், ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பிறகு இயந்திரங்கள் படிப்படியாக நிறுவப்படும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1-ம் தேதி முதல் மதுபானங்கள் அதிகபட்ச சில்லறை விலைக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும், Buy-Back திட்டத்துக்காகக் கூடுதல் தொகை வசூலிக்கப்படாது என்றும், தகுதியுடைய காலி மதுபாட்டில்களைத் திருப்பிக் கொடுத்தால் ரூ.10 வழங்கப்படும் என்றும் நுகர்வோருக்குத் தெரிவிக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். இந்தப் பணியை அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்க மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

பழைய அதிகபட்ச சில்லறை விலை அச்சிடப்பட்ட மதுபாட்டில்களும், திருத்தப்பட்ட விலை அச்சிடப்பட்ட மதுபாட்டில்களும் பழைய இருப்புகள் தீரும் வரை ஒரே நேரத்தில் விற்பனை செய்யப்படும். எனவே, இரண்டு வகையான பாட்டில்களுக்கும் ஏற்ற வகையில் பில் தயாரிக்கும் மென்பொருளில் மாற்றம் செய்யப்படும். திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை கொண்ட பாட்டில்களுக்கு மீண்டும் கூடுதலாக ரூ.10 சேர்த்துப் பில் தயாரிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலி பாட்டில்களைத் திருப்பிக் கொடுக்கும் நுகர்வோருக்கு வழங்குவதற்கான தொகையை முறையாகக் கையாளவும், தினசரி விற்பனைத் தொகையை டாஸ்மாக் கணக்கில் செலுத்தவும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon