பெற்ற பெண் குழந்தையை தந்தையே ஆற்றில் புதைத்த கொடூரம்…!

பெண் குழந்தை பிறந்ததால் வெறுப்படைந்த தந்தை பிறந்த 15 நாட்களில் அதனை ஆற்றில் புதைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சுந்தரேசபுரம் கிராமத்தை சேர்ந்த வரதராஜன், சௌந்தர்யா தம்பதிக்கு திருமணமாகி 15 மாதங்களே ஆகின்றன.

 

இந்நிலையில் 15 நாட்களுக்கு முன் இவர்களுக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்தது பெண் குழந்தை என்று அறிந்த உடனேயே மருத்துவமனையிலிருந்து வரதராஜன் சென்றுவிட்டார்.

 

பின்னர் உறவினர்களே சௌந்தர்யாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். வீட்டிற்கு வந்த பிறகு மூன்றாவது நாள் குழந்தையை எடுத்துச் சென்று தென்பெண்ணை ஆற்றில் புதைக்க சென்றதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் பார்த்து குழந்தையை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். வரதராஜனின் நடவடிக்கையால் பயந்துபோன சௌந்தர்யா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

இந்நிலையில் சமாதானமாகப் பேசி குழந்தையுடன் சௌந்தர்யாவை வீட்டிற்கு அழைத்து வந்த வரதராஜன் திங்களன்று மாலை குழந்தையை யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று தென்பெண்ணையாற்றில் புதைத்துள்ளார். குழந்தை வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த சௌந்தர்யா உறவினர்களிடம் கூறியுள்ளார்.

 

வரதராஜன் மீது சந்தேகமடைந்த அவர்கள் தென்பெண்ணை ஆற்றில் சென்று பார்த்த போது புதிதாக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அந்த பள்ளத்தில் சந்தேகத்தின்பேரில் தோண்டிய போது குழந்தையை துணியில் சுற்றி புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

 

இதனையடுத்து வரதராஜனை விசாரணை செய்ததில் குழந்தையை புதைத்ததை அவர் ஒப்புக்கொண்டார். தகவலறிந்து வந்த திருக்கோவிலூர் காவல் துறையினர் வரதராஜனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் குழந்தை என்ற காரணத்தால் பெற்ற குழந்தையை தகப்பனே ஆற்றில் புதைத்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Leave a Reply