--- --:--:-- --

ஹெல்மெட் கட்டாயம்.. பைக் ரேஸை தடுக்க தீவிர நடவடிக்கை – காவல் ஆணையர் அமல்ராஜ்

10

சென்னையில் பைக் ரேஸைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், போக்குவரத்து காவல்துறையின் பயன்பாட்டிற்காக ஹோண்டா நிறுவனம் வழங்கிய 50 புதிய இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு இலகுரக வாகனத்தைக் காவல் ஆணையர் அமல்ராஜ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

 

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், போக்குவரத்து காவல்துறைக்காக ஹோண்டா நிறுவனம் வாயிலாக 50 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. உயர் ரக 350 சிசி ஹோண்டா இருசக்கர வாகனங்களைச் சென்னை மாநகர காவல்துறைக்கு வழங்கியிருக்கிறார்கள். இந்த வாகனங்கள் போக்குவரத்தைத் தொடர்ந்து சீரமைப்பதற்காகக் காவல்துறையினரால் பயன்படுத்தப்படும்.

 

சென்னை மாநகரில் கடந்த வருடம் இதே 10 மாதங்களில் சாலை விபத்துகளில் 420 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த வருடம் போக்குவரத்து அதிகாரிகளின் சீரிய முயற்சியின் காரணமாக, சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது சுமார் 20 பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதில் இருந்து பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். இது காவல்துறையினரின் தொடர் முயற்சியின் காரணமாகவும், பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாகவும் சாத்தியமாகியுள்ளது.

 

இந்த வருடம் இதுவரை தலைக்கவசம் அணியாத காரணத்திற்காக 4,85,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். இருசக்கர வாகன விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தலைக்கவசம் அணியாத காரணத்தினால்தான் உயிரிழப்பதைப் பார்க்க முடிகிறது.

 

ஆகவே, பொதுமக்கள், இளைஞர்கள், வாகன ஓட்டிகள் அனைவரும் இருசக்கர வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாகத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று காவல்துறை சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். வழக்குகள் பதிவு செய்வதன் மூலம் மட்டும் இதை நடைமுறைப்படுத்த முடியாது. வாகனம் ஓட்டுபவர்கள் அனைவரும் இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை ஒரு செயல்பாடாக எடுத்துக்கொண்டு செயல்பട வேண்டும் என்று காவல்துறை சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

 

கடந்த வருடம் சாலை விபத்துகளில் 2,997 பேர் காயமடைந்துள்ளனர். இந்த வருடம் அந்த எண்ணிக்கை குறைந்து 2,865 பேர் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த எண்ணிக்கை மிக அதிகம். சென்னை மாநகரில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் யாரும் சாலை விபத்துகளில் பாதிக்கப்படாத சூழலை உருவாக்க அனைவரும் காவல்துறையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் மீதும், அதில் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களின் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், பைக் ரேஸைத் தடுக்கக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon