அன்பில் மகேஷுக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!
கடந்த தி.மு.க ஆட்சியின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பணியாற்றிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது, பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 100 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு, சுமார் 3 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வரும் நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டது. நீதிபதியின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, அவர் இரவோடு இரவாக சென்னை புழல் சிறையிலுள்ள முதல் வகுப்பு சிறைப் பிரிவில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அன்பில் மகேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான விசாரணை நீதிபதி சத்தியமூர்த்தி முன் நடைபெற்றது. அப்போது, பணப் பரிவர்த்தனைகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
அன்பில் மகேஷிடம் விசாரணை நடத்தும்போது நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகள் பின்பற்றப்படும், அவர் உரிய மன நலன், உடல் நலத்துடன் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார், அன்பில் மகேஷ் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்கள், பினாமி குறித்து விசாரிக்க வேண்டும் என்பதால் 5 நாள் காவல் தேவை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நவம்பர் 3-ஆம் தேதி வரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளார். மேலும், காவல்துறை காவலில் உள்ள காலத்தில் அன்பில் மகேஷை தினமும் அவரின் வழக்கறிஞர் சந்திக்கவும் சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




