மாறிமாறி சந்தித்தும் மாறவில்லை மனம் – மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட குழப்பம்

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவு வெளியாகி 12 நாட்களை கடந்தும் கூட புதிய அரசு அமைவதில், இழுபறி நிலவுகிறது. அரசியல் தலைவர்கள் மாறி மாறி சந்தித்துக் கொண்டாலும், முட்டுக்கட்டை தொடர்கிறது.

 

பாஜக ஆட்சியில் இருந்து வந்த மகாராஷ்டிராவில், 288 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க, 145 இடங்கள் தேவை என்ற நிலையில், 161 இடங்களை வென்ற பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 

எதிர்பார்ப்புக்கு மாறாக, அந்த கூட்டணியில் குழப்பம் உண்டானது. ஆட்சியில் சமபங்கு, சுழற்சி முறையில் 2½ ஆண்டுக்கு முதல்வர் பதவி தேவை என்று, சிவசேனா நிபந்தனை விதித்தது. இதை பாஜக ஏற்கவில்லை. இதனால், புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

 

பாஜகவை மிரட்டும் வகையில், காங்கிரஸ், தேசியவாத கட்சிகளின் ஆதரவை பெற சிவசேனா கட்சி ஒருபக்கம் முயற்சி மேற்கொண்டது. இதுபற்றி ஆலோசிக்க, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். ஆனால், சிவசேனாவுக்கு ஆதரவு தரும் பேச்சே இல்லையென்று சோனியா மறுத்துவிட்டார்.

 

மறுபுறம், ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகள் குறித்து, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதன் முடிவில், சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவிய தர பாஜக தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

 

ஆனால், ஆட்சியில் சமபங்கு என்ற நிலையில் இருந்து இறங்கிவர சிவசேனா மறுக்கிறது. காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு, சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு என, மாறிமாறி சந்திப்புகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும், யாருமே தத்தமது நிலையில் பிடிவாதமாக இருப்பதால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

 

இதனால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இன்னும் சில தினங்களுக்குள் புதிய அரசு அமைத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளதால், ஓரிரு நாளில் இதற்கு விடை தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply