தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே திருவள்ளுவர் சிலையை அவமதித்த விஷமிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவள்ளுவர் காலனி என்னுமிடத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு 3 அடி உயரம் கொண்ட வள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. அந்த சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை சாணம் பூசி சென்றுள்ளனர்.
அதைக்கண்ட அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் திருவள்ளுவர் சிலை சுத்தம் செய்யப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. சிலையை அவமதித்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சையில் வள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருவள்ளுவர் படத்திற்கு காவியம் பூசியதற்கும், பிள்ளையார்பட்டி சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாக நாங்கள் அறிகிறோம் என்றும் கூறினார்.