மரணக்கயிறான மாஞ்சா நூல்! பெற்றோர் கண்முன்னே நிகழ்ந்த சோகம்!
மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் பெற்றோர் கண்முன்னே 3 வயது சிறுவன் உயிரிழந்த கோர சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொழுதுபோக்கு விளையாட்டிற்காக யாரோ ஒருவர் பறக்கவிட்ட பட்டம் ஒரு பாவமும் அறியாத சிறுவனின் உயிரைப் பறித்த கோர சம்பவம் தலைநகர் சென்னையில் மீண்டும் நடந்துள்ளது.
காற்றில் எங்கிருந்தோ பறந்து வந்த மாஞ்சா நூலால் கண்முன்னே மகனைப் பறி கொடுத்துவிட்டு துயரத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது அந்த குடும்பம். ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட கோபால் சென்னையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். குறுக்கு பேட்டையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக மனைவி சுமித்திரா, மூன்று வயது மகன் அபினையையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
மனைவியை பின்னாலும் மகனை முன்னால் அமர வைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட கோபால் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டு இருந்தார். அப்போது காற்றில் எங்கிருந்தோ பறந்து வந்த மாஞ்சா நூல் கண்ணிமைக்கும் நேரத்தில் அபினையுவின் கழுத்தை வெட்டி விட்டது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர்களை மீட்ட பொதுமக்கள் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துக் கொண்டிருந்த சிறுவனை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பல முயற்சிகளுக்குப் பின்னரும் சிகிச்சை பலனளிக்காமல் அபினையு உயிரிழந்தது அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மாஞ்சா நூல் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்களை அடுக்கடுக்காக சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள். சிறுவனுக்கு நேர்ந்த கோர சம்பவம் குறித்து அறிந்ததும் காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காமராஜர் நகர், நேதாஜி நகர், நேரு நகரில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மாஞ்சா நூலை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சில ஆன்லைன் நிறுவனங்களில் புது விதமான மாஞ்சா நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதே காவல்துறையினரின் குற்றச்சாட்டு.
இதற்காகவே நம்பர் 10 என்ற பிரத்தியேக நூலும் விற்பனைக்கு வந்திருப்பதாகவும். மாஞ்சா நூலைப் போலவே அதுவும் அபாயகரமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. உயிரிழப்புகள் நடக்கும் போது மட்டுமே நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் காவல்துறை, பின்னர் இவ்விவகாரத்தை பெரிதும் கண்டு கொள்வதில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் சென்னை மக்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




