பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ விசாரணை விவரங்களை வெளியிட நீதிமன்றம் மறுப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை விவரங்களை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உண்மையை கண்டறிய குழு அமைக்க வேண்டும் என்பது குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர் சாந்தகுமார் என்பவர் உட்பட 10 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

 

வழக்கின் இறுதி அறிக்கையை வழங்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வினித் கோத்தாரி மற்றும் நீதிபதி சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணை ரகசியமாக நடக்க இருப்பதால் இறுதி அறிக்கையை அம்பலப்படுத்தும் வகையில் மனுதாரர்களுக்கு அம்பலப்படுத்த முடியாது என சிபிஐ தரப்பு தெரிவித்தது.

 

விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக கூறிய சி‌பி‌ஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும் வரை கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் இருப்பார்கள் என தெளிவுபடுத்தியுள்ளது.

 

இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் தங்களிடம் உள்ள ஆதாரங்களை சிபிஐ வசம் ஒப்படைக்கலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


Leave a Reply