ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. வரும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரலில் பொதுத்தேர்வு நடத்துவதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட அளவில் 32 மாவட்டங்களுக்கும் தனித்தனி தேர்வுக் குழுவை அமைத்து தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான 8 பேர் கொண்ட தேர்வுக்குழு மாவட்ட அளவில் பொது தேர்வு நடத்தும் பணிகளை மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று கிலோமீட்டர் தூரத்திற்குள்ளும் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்தாம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய மூன்று படங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் எனவும், எட்டாம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.