இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 57 வது குருபூஜை, தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக நடந்தது. இதனையொட்டி, தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயக்குமார், பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி, குருபூஜையில் அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேவர் நினைவிடம் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறோம். அந்த வகையில் அரசு சார்பில் முதல்வரான நானும், துணை முதல்வர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக., தலைமை நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினோம்.
இராமநாதபுரத்தில் 1937ல் நடந்த தேர்தலில் முதன்முதலில் வெற்றி பெற்ற தேவர், 1946ல் சென்னை மாகாணத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து 1952, 57, 62 ஆண்டுகளி ல் நடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் ஒரே நேரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேவர் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, தேவருக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு விழா எடுக்கப்படும் என மறைந்த முதல்வர் எம்ஜிஆர்., அறிவித்து 1979 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்து அவரது பிறந்த நாளான அக்.30 ஆம் தேதி அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சென்னை நந்தனத்தில் தேவரின் முழு உருவ வெண்கலச்சிலையை 1994 ஆம் ஆண்டு ல் நிறுவி திறந்து வைத்தார். 2014ல் தேவருக்கு 13 கிலோ தங்க கவசத்தை அதிமுக., சார்பில்மறைந்த ஜெயலலிதா வழங்கினார்.தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்ட பசும்பொன் தேவர், அவர் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு செய்த சேவைகள் மனதில் குடிகொண்டுள்ளது. அதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவிடத்தில் அரசும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புகழஞ்சலி செலுத்தி பெருமை சேர்த்து வருகிறோம் என்றார்.