சுர்ஜித் உயிரிழப்பிற்கு தலைவர்கள் அஞ்சலி!

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித்திற்கு தமிழக ஆளுநர் மற்றும் பல்வேறு கட்சியின் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். குழந்தையை இழந்து வாடும் சுர்ஜித்தின் பெற்றோருக்கு இறைவன் மனவலிமையை அளிக்கட்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது முகநூல் பக்கத்தில் கருவறை இருட்டு போல் உள்ளே இருப்பாய் என நினைத்தோம் கல்லறை இருட்டாய் மாறும் என்று எண்ணவில்லை என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கேஎஸ் அழகிரி தனது இரங்கல் செய்தியில் கடுமையான முயற்சிகள் தோல்வியுற்று குழந்தை சுர்ஜித் உயிரிழந்திருப்பது வேதனையை தருகிறது என்று கூறியுள்ளார். எப்படியாவது மீட்கப்பட்டு விடுவான் என்று நம்பி உலகமே இறைவனை வேண்டிய நிலையில் குழந்தை சுர்ஜித்தை உயிருடன் மீட்க முடியாதது அதிர்ச்சியளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆழ்துளை கிணறுகள் தோண்ட கடுமையான விதிகளையும் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.ஆழ்துளை கிணற்றால் ஏற்பட்ட இறுதி மரணம் சுர்ஜித்தாக இருக்கட்டும் என்று பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

குழந்தை சுர்ஜித்தின் உயிரிழப்பிற்கு நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரையுலக கலைஞர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். சுர்ஜித்தின் மரணம் மிகுந்த வேதனை அளிப்பதாக பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் குழந்தையின் ஆன்மா சாந்தியடையட்டும் என குறிப்பிட்டு உள்ளார். கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள வீடியோவில் உலகத்தில் நீளமான சவக்குழி இதுதானோ என்னவோ என்று இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சுசாவு என்றும் கூறியுள்ளார்.

சுர்ஜித் இழப்பை தாங்கும் வலிமையை அவரது குடும்பத்திற்கு இறைவன் அளிக்க வேண்டும் என இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் ட்விட் செய்துள்ளார். உபயோகமற்ற ஆழ்துளை கிணறுகளை மூட போர்க்கால அடிப்படையில் அரசும், தனி மனிதரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதேபோல நடிகர்கள் விவேக் லாரன்ஸ்,இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் பிரபு நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் தங்களது இரங்கலை பதிவு செய்துள்ளனர்.


Leave a Reply