முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜையையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி மற்றும் 52ஆவது குரு பூஜையையொட்டி மதுரை கோரிப்பாளையம் மற்றும் ராமநாதபுரம் பசும்பொன்னில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கண்காணிப்பு கோபுரங்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மழையில் நனைந்தபடியே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அவர்களுடன் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து கோரிப்பாளையம் வருகை தந்த திமுக தலைவர் ஸ்டாலின் துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி உள்ளிட்டோர் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
கோரிப்பாளையத்தை தொடர்ந்து தலைவர்கள் பசும்பொன்னில் முகாமிட்டதால் அங்கு 15,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். குரு பூஜையையொட்டி முத்துராமலிங்கதேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.