கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வெளியே வந்த இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

சென்னையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வெளியே வந்த இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவர் பழிக்குப்பழியாக கொல்லப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சென்னை பாடி புது நகரை சேர்ந்தவர் அழகு என்கிற அழகுமுருகன். கடந்த 2010-ஆம் ஆண்டு இறுதி ஊர்வலம் ஒன்றில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொன்ற வழக்கில் அவருடன் இருந்ததாக கைது செய்யப்பட்டு பின்னர் வெளியே வந்தார்.

 

கொலை வழக்கில் கைதாகி வெளியே வந்த பின்னர் இவர் வேலைக்கு எதுவும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இவர் தனது வீட்டில் இருந்து 12வது தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்வதற்காக ஆயுதங்களோடு துரத்தியுள்ளனர். பின்னர் பதினோராவது தெரு சந்திப்பில் வைத்து அழகுமுருகனை அந்த கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது.

 

கொலை சம்பவத்தை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடல் அருகே அமர்ந்து கதறி அழுதனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெ.ஜெ.நகர் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

 

கடந்த 2010-ஆம் ஆண்டு நடந்த இறுதி ஊர்வலத்தில் சிவலிங்கம் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் உடன் இருந்ததாக அழகுமுருகன் கைதுசெய்யப்பட்ட நிலையில் அதற்கு பழிக்கு பழி வாங்க கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


Leave a Reply