“சாமி” வரம் கொடுத்தாலும்… “பூசாரி” கொடுக்க மறுத்த கதையான உள்ளாட்சி தேர்தல்…! தேதி அறிவிக்க மேலும் ஒரு மாத அவகாசம் பெற்றது தேர்தல் ஆணையம்!!

ஆளும் அதிமுக அரசு தயக்கம் காட்டி வந்த போது உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று கூறி வந்தது மாநில தேர்தல் ஆணையம் . இப்போது சாமி வரம் கொடுத்தது போல, ஆட்சியாளர்கள் டிசம்பருக்குள் தேர்தல் நடைபெறும் என அறிவிக்க,பூசாரி மறுத்த கதையாக தேர்தல் ஆணையமோ, உப்புச் சத்தில்லாத சாக்கு போக்கு காரணங்களைக் கூறி தேதியை அறிவிக்க மேலும் ஒரு மாதம் அவகாசம் பெற்றுள்ளது. இதனால் தேர்தல் எப்போது? என்பது மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது.

 

தமிழகத்தில் கடந்த 2016 அக்டோபர்ல் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்தது. தொடர்ந்து அந்த ஆண்டே தேர்தல் அறிவிப்பு வெளியிடப் பட்டு, வேட்பு மனு தாக்கலும் நடைபெற்றது. அந்த நேரத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில், தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் திடீரென தடை போட்டது. இதனால் தள்ளிப் போன உள்ளாட்சித் தேர்தல், கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படாமலே உள்ளது.

 

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம், சசிகலா தரப்பினரை நீக்கியது,அதன் பின் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்தாலும் தொடரும் பூசல் போன்றவற்றால், ஆளும் அதிமுக தரப்பில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயக்கம் காட்டியதும் ஒரு காரணமாக இருந்தது. இதனால் ஏதேனும் ஒரு காரணங்களை ஆளும் தரப்பும், மாநில தேர்தல் ஆணையமும் மாறி மாறிக் கூறி தேர்தல் நடத்துவதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தன.

இதனால், தேர்தலை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், தேர்தலை நடத்த நீதிபதிகள் கெடு விதித்தனர். எனவே வேறு வழியின்றி இம்மாதம் 31-ந் தேதிக்குள் தேர்தல் தேதியை அறிவித்து விடுவதாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் வாக்குறுதி கொடுத்திருந்தது. தொடர்ந்து, தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளிலும் விறுவிறுப்பு காட்டிய தேர்தல் ஆணையம், எந்த நேரத்தி ஓம் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்றும் சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

 

ஆனாலும், அதிமுக தரப்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மவுனமே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவு என்னாகுமோ? என்ற கலக்கமே காரணம் என்றும் கூறப்பட்டது. தேர்தல் முடிவு சாதகமானால் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது என்ற மனநிலையில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அதிமுக மேல் மட்ட நிர்வாகிகள் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. எனவே இந்த இரு தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவை அறிய அனைத்துக்கட்சியினரும் மட்டுமின்றி, உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட ஆர்வமாக இருந்த பலரும் ஆவலாக இருந்தனர்.

 

நேற்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, இரு தொகுதிகளிலும் அதிமுக அமோகம் என்ற செய்திகள் வர ஆரம்பித்த உடனே, உள்ளாட்சி தேர்தல் பற்றிய பரபரப்பு பேச்சும் றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்தது.

 

தேர்தல் முடிவு வருவதற்கு முன்னரே, துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் உற்சாகமாகி, டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றார். அமைச்சர்கள் பலரும் இதனையே தெரிவிக்க, தமிழகம் முழுவதும் ஒரே நாளில் உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


ஆனால் சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்காத கதை என் பார்களே.. அது போல மாநில தேர்தல் ஆணையம் , உச்ச நீதிமன்றத்தில் உப்புச் சப்பில்லாத காரணம் கூறி, தேர்தல் அறிவிப்பை மீண்டும் தள்ளி வைக்க காரணமாகியுள்ளது. நேற்று உச்ச நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, தேர்தல் அறிவிப்பு செய்ய மேலும் 4 வாரம் அவகாசம் கேட்டது மாநில தேர்தல் ஆணையம். இதற்கு கூறப்பட்ட காரணம் என்ன தெரியுமா? போதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் கைவசம் இல்லையாம். மேலும் மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற தேர்தலுக்கும் எந்திரங்கள் அனுப்பட்டதாகவும், அதனால் ஒரு மாதம் அவகாசம் தேவை என்று தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள் வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்திருந்தனர்.

 

இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்க மேலும் 4 வாரம் அவகாசம் கேட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று அக்.31-ம் தேதியில் இருந்து 4 வாரம் அவகாசமும் வழங்கி உத்தரவிடப்பட்டது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு தற்போதைக்கு மேலும் ஒரு மாதத்திற்கு தள்ளிப்போயுள்ளது. இதனால் ஒரு மாதத்திற்கு பிறகாவது தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்குமா? அல்லது மேலும் மேலும் தள்ளிப்போடுமா? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் இந்தப் போக்கு சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி கொடுக்க மறுத்த கதை போல உள்ளது என்ற பழமொழி போலாகி விட்டது.


Leave a Reply