ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட நவம்பர் 13-ந் தேதி வரை மீண்டும் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ல் நடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் அப்பாவு, அதிமுக சார்பில் இன்ப துரை போட்டியிட்டனர். இதில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்ப துரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, கடந்த மூன்றரை வருடங்களாக எம்எல்ஏவாக உள்ளார்.
இதற்கிடையே இன்ப துரை வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். ராதாபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது, 19,20,21 சுற்றுகள் எண்ணப்பட்டதில் முறைகேடு நடந்ததாகவும், தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை என்றும் குற்றம் சாட்டிய அப்பாவு, மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டார். இதனால் இம்மாதம் 4-ந் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வேட்பாளர்களும், அவர்களின் வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.இறுதி மூன்று சுற்று வாக்குகளும், தபால் வாக்குகளும் மீண்டும் எண்ணப்பட்ட நிலையில், மறு வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க அக்டோபர் 24-ந் தேதி வரை இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் இன்ப துரையின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை மீண்டும் நடைபெற்றது. இதனால் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவு குறித்து முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், வரும் நவம்பர் 13-ந் தேதி வரை மறு வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க இடைக்காலத் தடையை நீட்டித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையையும் ஒத்தி வைத்தனர்.