ஒரு மணி நேரத்தில் முடிந்த வாக்கு எண்ணிக்கை: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்.அமோக வெற்றி

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 7,171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை ஒரு மணி நேரத்தில் முடிவடைந்து முடிவு அறிவிக்கப்பட்டது.

 

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளில் கடந்த 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

 

இந்த 3 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை நடந்தது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு 9 மணி வரை அறிவிக்கப்படவில்லை.

ஆனால், சின்னஞ் சிறு தொகுதியான புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியிலோ ஒரே ஒரு மணி நேரத்தில் 3 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து 9 மணிக்கு முடிவு அறிவிக்கப்பட்டது.

 

காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான் குமாரும், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஷ்வரனும் போட்டியிட்டனர். இன்று 3 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 14,782 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஷ்வின் 7611 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.வாக்கு வித்தியாசம் 7 171 ஆகும். இந்த வெற்றியின் மூலம் காமராஜ் நகர் தொகுதியை காங்கிரஸ் தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply