ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்திய அளவில், மற்ற நகரங்களை விட சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக உள்ளது என பயணிகள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. மேலும் பயணக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் முதற்கட்டமாக ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும் மெட்ரோ ரயில் கட்டணத்தை பாதியாக குறைத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் .
வார இறுதி நாட்களில் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில், குறைந்தளவிலான பயணிகளே பயணித்து வருகின்றனர். எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தற்போது ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் விடுமுறை நாட்களில் பயணக் கட்டணம் 50 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தக் கட்டணக் குறைப்பு அமலுக்கு வருகிறது.