இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக தேர்வு செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
இந்திய கிரிக்கெட்டின் முக்கிய அங்கமான பிசிசிஐயின் தலைவர் பதவி கடந்த 33 மாதங்களாக காலியாக இருந்தது. உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகக் குழு ஒன்றே பிசிசிஐயின் பணிகளை கண்காணித்து வந்தது.இந்நிலையில், பிசிசிஐ நிர்வாகிகள் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 14-ந் தேதி வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதில் தலைவர் பதவிக்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து பிசிசிஐயின் 39-வது தலைவராக கங்குலி இன்று பதவியேற்றார். மும்பையிலுள்ள பிசிசிஐயின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கங்குலிக்கு பிசிசிஐ நிர்வாகிகள், இந்திய கிரிக்கெட் அணி இந்நாள்,முன்னாள் அணி வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.