மூன்றே மாதத்தில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..! 12 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை!!

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு மேட்டூர் அணை மூன்றே மாதத்தில் 3-வது முறையாக நிரம்பி வழிகிறது. உபரி நீர் திறப்பால், 12 மாவட்டங்களில் காவிரி கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

கர்நாடகாவில் தென் மேற்கு பருவ மழை இந்தாண்டு வெளுத்துக் கட்டியது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பின. இதனால் காவிரியில் தமிழகத்துக்கு அதிகமான உபரி நீர் திறக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் மேட்டூர் அணை முதல்முறையாக நிரம்பியது. இதனால் டெல்டா பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

 

கர்நாடகாவில் மீண்டும் மழை கொட்டியதால் கடந்த செப்டம்பர் மாதமும் 2-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. தொடர்ந்து வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை கொட்டித் தீர்க்கிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு, நேற்று 500 அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டது. நீர் திறப்பு குறைவாகவும், நீர்வரத்தும் அதிகமாக இருந்ததால் மேட்டூர் அணை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் நேற்று வெளுத்து வாங்கிய மழையால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு திடீரென 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் இன்று காலை அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

 

இதனால் அணையிலிருந்து வினாடிக்கு 22,500 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியில் அதிக அளவு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

மேட்டூர் அணை கட்டப்பட்ட 86 ஆண்டுகால வரலாற்றில், இதுவரை 44 முறை நிரம்பியுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு 3-வது முறையாக நிரம்பியுள்ளதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Leave a Reply