ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கல்கி பகவானுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இதன் கிளைகள் தமிழகம் மற்றும் வெளிநாடுகளிலும் உள்ளன. இந்த நிலையில் கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ஐந்து நாட்களாக நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத வெளிநாட்டு கரன்சிகள் உட்பட 44 கோடி ரூபாய் பணம், 90 கிலோ நகைகள் உட்பட 105 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 500 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது .
இந்நிலையில் கல்கி பகவான் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை மறுத்துள்ள கல்கி பகவான், தாம் வெளிநாடு தப்பிச் செல்ல வில்லை என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் பக்தர்கள் தான் தங்கள் பலம் எனவும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் கல்கி பகவானின் மகன், மருமகள் ஆகியோர் நேரில் ஆஜராகினர். இருவரிடமும் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினார். தொடர்ந்து கல்கி பகவான் மற்றும் அவரது மனைவியிடமும் விசாரணை நடத்த வருமானவரித் துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .